Sunday 18 December 2016

மாமல்லபுரம் - வரலாற்று புதிர்கள்




சிவகாமியின் சபதம் எழுதும் முன், மாமல்லபுரத்துக்கு சென்று அங்குள்ள சிற்பங்களை காணும் முன்னும், அதன் பின்னும், கல்கி கிருஷ்ணமூர்த்தி எந்த வரலாற்று நூல்களை படித்தார்? இல்லை எதையும் படிக்கவில்லையா? கற்பனையிலேயே கதை அளந்தாரா? மல்லையில் உள்ள ஒரு முக்கியமான சிற்பத்தை காணாமல் வந்துவிட்டோம் என்று மிகவும் வருந்தினாராமே? எதுவாக இருக்கும்?

ஸ்ரீரங்கமும் சிதம்பரமும் காஞ்சி காமாட்சியும் மதுரை மீனாட்சி கோயிலும் பழனி முருகனும் ராமேஸ்வரமும் அடையாத என்ன புகழை என்ன எழிலை என்ன சிறப்பை மாமல்லபுரம் பெற்றது என கருதி, ஐநா சபையின் யுனெஸ்கோ இலாக மாமல்லபுரத்திற்கு மட்டும் உலக மரபு சின்னம் என்ற பட்டத்தை வழங்கியது?

மகாபலியா? மாமல்லனா? பஞ்ச பாண்டவர்களா? மாமல்லபுரத்து சிற்பங்களை படைக்க யார் காரணம்? யாரோ அத்யந்தகாமனாமே? அவனுக்கும் மல்லைக்கும் என்ன சம்பந்தம்?

ராஜ ராஜ சோழனின் கல்வெட்டு மாமல்லபுரத்தில் உள்ளதாமே? அவன் தஞ்சை கோயிலை அல்லவா கட்டினான்! எல்லோரா கைலாசநாதருக்கும் கடற்கரை கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? ரோமாபுரி நாணயங்கள் மாமல்லையில் கிடைத்ததா? சங்க காலத்தில் மல்லை ஒரு துறைமுகமாக இருந்ததா? பீம ரதம் ஒரு புத்த விகாரமா?

ஆழ்வார்கள் பாடிய மாமல்லபுரத்தை ஒரு ஆங்கிலேயரும் பாடியுள்ளாராமே? என்ன பாடினார்? ஏன் பாடினார்?

ஆயிரமாண்டுகளுக்கு மேல் மகேந்திர வர்ம பல்லவர் இயற்றிய ஒரு நாடகம் கேரளத்தில் அரங்கேறி வந்துள்ளதா? அதே நாட்டிய நாடகம் சென்னையில் அரங்கேறுமா? நாட்டிய சாத்திரத்தை இயற்றிய பரத முனிவருக்கு மல்லையில் சிற்பம் உள்ளதா? இந்திரனுக்கும் சிலையுள்ளதாமே – இது என்ன அதிசயம்? யுதிஷ்டிரன் சிம்மாசனம் உள்ளதா? வாமன அவதாரத்தில் ஜாம்பவான் எப்படி வந்தார்? ராவணனையும் பலராமனையும் ஒரே இடத்தில் காணமுடியுமா??!!!

இப்படி பல புதிர்களை ஒளித்து வைத்து பல குழப்பங்களை உண்டாக்கி எண்ணற்ற வரலாற்று துப்பறிஞர்களையும் கலை ஆர்வலரையும் ஓவியர்களையும் ஊக்குவித்த மாமல்லபுரத்தை பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கம் வரும் டிசம்பர் 24-25, 2016 அன்று சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ் இணைய கல்விகழக அரங்கில் நடக்க உள்ளது. ஒன்பது உரைகள். ஒரு இயல் இசை நாட்டிய நாடகம்.

கடல் மல்லை கிடந்த கரும்பையும் பார்த்தனுக்கு பாசுபதம் அளித்த பரமனையும் மாமயிடன் செற்றறுத்த கோலத்தாளையும் கண்டு மாமல்லபுரத்திம் மர்மங்களை அறிந்து சிறப்ங்களின் கலை நுணுக்கங்களில் ஓங்கு பெருஞ்செந்நெல்லூடு கயல் போல் உகள, எல்லீரும் வாரீர்!

பல்லவ மல்லை பேச்சுக் கச்சேரி நிகழ்ச்சி நிறல்  
தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் வலைத்தளம்

என்னுடைய மாமல்லபுரம் வலைப்பதிவுகள்
  1. கோயிலும் கல்கியும்
  2. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 
  3. மல்லை சிற்பியர் வாழ்த்து
  4. பத்ரி சேஷாத்ரி - அதிரணசண்ட மண்டபத்துமூன்றாம் கல்வெட்டு
நிகழ்ச்சி நிறல் 
24.12.2016 – சனிக்கிழமை
காலை 10 மணி அத்யந்தகாமனின் அடிச்சுவட்டில்
பல்லவ சிற்பங்கள் ஒரு பார்வை
முனைவர். சித்ரா மாதவன்
காலை 11.30 மணி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை - அறிமுகம்
காலை 11.45 மணி சிற்பம் சிவம் சுந்தரம்
மாமல்லை சிற்பங்களின் உடல் மொழி
பேராசிரியர். சிவராமகிருஷ்ணன்

மதியம் 2.00 மணி புலவன் அத்யந்தகாமன்
கலைக்கடலின் இலக்கிய நயம்
முனைவர். சங்கரநாராயணன்
மதியம் 3.45 மணி சங்கம் முதல் சமீபம் வரை
மல்லை வரலாற்றை ஆய்வாளர் துப்பறிந்த கதை
திரு. கோபு ரங்கரத்தினம்
மாலை 5.30 மணி மத்தவிலாச பிரஹசனம்நாட்டிய நாடகம்
விசித்திர சித்தனின் வினோத காவியம்
முனைவர். ஸ்வர்ணமால்யா கணேஷ்

25.12.2016 – ஞாயிற்றுக்கிழமை
காலை 10.00 மணி கொற்கை நன்றே
மல்லையில் மகிஷாசுரமர்த்தினியின் கோல வடிவங்கள்
முனைவர்.எஸ். பாலுசாமி
காலை 11.45 மணி நவிலும் சிற்பத்தில் நான்கானவன்
ரசிகர் அகப்பொருள்கலை ஆர்வலரின் கருத்துக் கோவை
பேராசிரியர்.எஸ். சுவாமிநாதன்

மதியம் 2.00 மணி தமிழில் நனைந்த கலை
ஆழ்வார்களின் கடல்மல்லை  பாசுரங்கள்
பேராசிரியர்.மதுசூதனன்
மதியம் 2.45 மணி மல்லையின் தமிழ் கல்வெட்டுகள்
பின்தொடர்ந்த மன்னரின் குரல்
திரு.கே. ஸ்ரீதரன் 
மதியம் 3.45 மணி யார் அந்த அத்யந்தகாமன் – புத்தொளி
ஐம்பதாண்டு கால மல்லை ஆய்வுகள்

முனைவர். நாகசாமி

No comments:

Post a Comment