Saturday 26 September 2015

கோயிலும் கல்கியும் 1 - அறிமுகம்


கோயில்களுக்கு நாம் ஏன் செல்கிறோம்? வழிபட தான். சிலருக்கு தொட்டில் பழக்கம். அளவோடு பக்தி உள்ளவரும், திருவிழாக்களை காணவும், உற்றார் உறவினர் திருமணம், பிறந்தநாள், வேண்டுதல், மொட்டை, என்று ஏதோ காரணத்திற்கு, சமூக வழக்கத்தில் கோயில் செல்கிறோம். கச்சேரி, நாட்டியம், என்று கலை ரசிக்கவும் கோயில் செல்வது வழக்கம். சக்கரை பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடைமாலை, கற்கண்டு, என்று பிரசாதம் வகையறாக்கள் தான் சிறுவயதில் அதிகம் நம்மை ஈர்க்கும். அங்குமிங்கும் மற்ற சிறுவருடன் ஓடி விளையாடுவது, கல் யானை மேல் சவாரி, படிகளில் சருக்குதல், குளத்தில் நீர் விளையாட்டு, கடைகளில் செப்போ,  சிறுபண்டமோ வாங்குவது

சிறு வயது முதல் நானும் இப்படிதான் கோயிலுக்கு போய் பழக்கப்பட்டேன். சென்னையில் நான் வளர்ந்த மயிலாப்பூரில், அடிக்கடி சென்றது ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் கோவிலுக்கு தான். அந்த கோயில் உள்ளதோ டி.என்.எஸ்.சி வங்கி வளாகம், என் தந்தை அங்கே கணக்கு வைத்திருந்தார். கவிஞர் வாலியின் மகிமையில் சினிமா பாடல் பெற்ற தலமாகிவிட்டது. அங்கே வடைமாலை நாட்கள் கொண்டாட்டம். அதற்கடுத்து நான் வசித்த மயிலை சிஐடி காலனியிலுள்ள விநாயாகர் கோயில். நேரமிருந்தால் ஆழ்வார் பாடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் அங்கே கல் யானை சவாரியும். அல்லது ஞானசம்பந்தர் பாடிய கபலீசுவரர் கோயில். அறுபத்திமூவர் விழாவையும் தெப்பத்தையும் சில முறை ரசித்ததுண்டு. சுமார் பத்து வயதில் வைதீஸ்வரன் கோயிலுக்கு குடும்பத்தோடு சென்றேன்.

கோயிலின் பிரம்மாண்டம், தொன்மை, வயல்சூழ்ந்த திணை, எல்லாம் அங்கே தான் முதலில் பாடம். கல்லூரி நாட்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்றது கல்வெட்டு படிக்கலாம் என்ற ஆசையிலும் பால்கோவா ஈர்ப்பிலும். அறிவியல் ஆர்வத்திலும் வாலிப கர்வத்திலும், கோயில்களின் புனிதமோ கலையோ தொன்மையோ பெரிதாக என்னை கவரவில்லை. அவை இறந்த காலத்தின் சின்னங்களாகவே தெரிந்தன. 

கம்ப்யூட்டரையும் ராக்கெட்டையும் ரோபோட்டையும் விண்வெளியையும் ஏங்கி ஆவலுடன் பார்த்த என் கண்களுக்கு கோயில்கள் சுவாரசியமாய் இருக்கவில்லை. சக மாணவர்கள் பெண்களை பார்க்க மட்டும் கோயில்கள் செல்வது அவற்றை கொஞ்சம் மட்டம் தட்டின. கோயிலுக்கு வந்த பெண்களும் என் கண்களை கவரவில்லை. 

கோயில் மட்டுமல்ல, கலையும் மதிப்பிலா பண்டம் ஆனது. சினிமா இசை மேல் ஒரு சின்ன மோகம் வந்தது, வேகமாய் பெரும் மோகமாக, ஆர்வமாக மாரியது. இளையராஜா மானசீக குருவானார். நண்பன், சக அரைவாசி சிவராம், இசை வழிகாட்டி ஆனான். அவனுடைய ரசனை என் ரசனை ஆனது. தமிழ் புத்தகங்களை நான் படித்ததில்லை, பள்ளிப்பாடமும், குமுதம் ஆனந்த விகடன் துணுக்குகளும், ரெட்டைவால் ரங்குடுவும், சிரிப்பு திருடன் சிங்காரவேலனும் என் தமிழ் இலக்கிய உலகம். ஆங்கிலத்தில் பல நாவல்களை படித்ததுண்டு. ஆங்கில படங்களை தான் ரசித்தேன்; கல்லூரியில் பார்க்கத்தொடங்கிய சினிமா எதுவும் ஈர்க்கவில்லை.

அமெரிக்கா சென்ற பின் குமுதம் வகையறா சுவரொட்டி வகையறா தமிழ் இலக்கியமும் போனது. மேல் படிப்பு முடிந்து, கணினி தொழிலில் ஐந்தாண்டுகள் சென்றன. இயற்கையை ரசிக்க கற்றுக்கொண்டேன். சியாட்டிலிலிருந்து கலிஃபோர்ணியாவுக்கு இடம் மாற நினைத்து, விசா வாங்க மீண்டும் சென்னை வந்த காலம், பொன்னியின் செல்வன் புகழை சிலர் பாடியதால் ஒரு புத்தக கடையில் கல்கியின் காவியம் பொன்னியின் செல்வனை வாங்கினேன். கலிஃபோர்ணியாவில் வாசிக்க எடுத்த பொழுது தான் உணர்ந்தேன். வாங்கியது சிவகாமியின் சபதம்.

பத்து பக்கத்தில் பரஞ்சோதி என்னை கவர்ந்தான். முப்பது பக்கத்தில் நரசிம்ம வர்மன் நண்பனானான். சிவகாமி கண் சிமிட்டினாள். மலைக்கணவாயில் பரஞ்சோதி செல்ல, உடம்பெல்லாம் புல்லரித்தது. யானோ வாசகன்? யானே க்ஷத்திரியன்! புலிகேசி படையுடன் காஞ்சிக்கு வருமுன் மகேந்திர வர்ம பல்லவன், என்னை கைது செய்தான். அடடா! சாகசத்தில் கபில் தேவையும், கலைத்திறனில் இளையராஜாவையும், வீரத்தில் அலிஸ்டேர் மாக்லீன் கதை நாயகர்களையும், நவரசத்தில் லியோணார்டோ டாவின்சியையும், சிந்தனைத்தெளிவில் காந்தியையும் சர்ச்சிலையும் மிஞ்சி, நம் காஞ்சிபுரத்தில் விசித்திரசித்தன் ஒருவன் இருந்தான். இவனை இதுநாள் வரை அறியாமல் போனோமே என்று உள்ளம் நொந்தது.


கபட நாடக கண்ணனை போல் கல்கி சிரித்தார்.

(மனம் வணங்கும் போது தொடரும்...)

4 comments:

  1. heavy loss in earlier life. got it atleast than never/allthe best

    ReplyDelete
  2. heavy loss in earlier life. got it atleast than never/allthe best

    ReplyDelete
  3. மனம் வணங்கும் போது தொடரும்...).. haha

    ReplyDelete
  4. உங்களின் *மனயாத்திரை* பற்றிய எழுத்துக்கள் புதுமை மற்றும் சுவையாக இருக்கின்றன. 8 வருட்ங்களாக மனம் வணங்காமலாக போய்விட்டதா என்ன??!! தயவுசெய்து தொடருங்கள்
    . ஆவலுடன் காத்திருக்கிறேன் உடன் பயணிக்க.

    ReplyDelete