Monday 26 May 2014

கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் ஓவியங்கள்

ஒரியாவிலுள்ள கொனாரக் சூரியனார் கோயிலுக்கு நான் 2011 நவம்பரில் சென்ற பொழுது, சுற்றுலா வழிகாட்டி (tourist guide) ஒருவர், அந்தக்கோவில் வராஹமிஹிரரால் கட்டப்பட்டது என்றார். வராஹமிகிரர் பஞ்சசித்தாந்திகா, ப்ருஹத் ஸம்ஹித, ப்ருஹத் ஜாதக ஆகிய ஜோதிட நூல்களை எழுதியவர். விண்ணியல் விஞ்ஞானி என்றும், ஜோசிய நூலாசிரியர் என்றும் அறியப்பட்டவர். ஆனால் கோயில்களை கட்டும்பணி, விஷ்வகர்மா சமூகத்தை சார்ந்த ஸ்தபதிகளுக்கே உரியது. அவ்வப்பொழுது, இந்த கோயில் நக்ஷத்திர அமைப்பு படியோ ராசிகளை குறிக்கும் வழியிலோ கட்டப்பட்டது என்று நான் கேள்விபட்டதுண்டு. இன்றுவரை சாட்சி கண்டதில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்தில், குடுமியான் மலையில், அம்மன் சந்நிதி அருகே,12 ராசிகளும் கூறையில் செதுக்கப்பட்ட சிற்பம் உள்ளது. கும்பம் மீனம் துலாம் சிம்மம் என்று 12 சதுரங்களில் ராசிகளும், அதற்கு வெளியே, விநாயகர் உட்பட, பலவித சிறபங்கள் 20 சதுரங்களிலும், அதற்கும் வெளியே 28 தாமரைகளும் செதுக்கப்பட்டுள்ளன.  புதுக்கோட்டை நகரில் பிரஹதாம்பாள் (அரைக்காசு அம்மன் என்றால்தான் பலருக்கு தெரியும்) கோவிலில், வண்ணங்கள் பூசிய இவ்வகை சிற்பத்தை காணலாம்.

Kudumiyaan Malai Zodiac குடுமியான் மலை - ராசிகளின் சிற்பம்


Kumbakonam SarngapaaNi Zodiac  குடந்தை சாரங்கபாணி - ராசிகளின் சிற்பம்
கும்பகோணத்தில் சாரங்கபாணி (ஷார்ங்கபாணி) கோவிலின் மண்டபத்து கூறையிலும் சக்ரபாணி கோவிலிலும் இதை போன்ற ராசிகளுள்ள சிற்பங்களை பார்த்தேன். அதேபோல் திருவரங்கம் கோவிலில் ஆர்யபடாள் வாசல் என்ற கதவின் அடித்தளத்தில், இது போன்ற ராசி சின்னங்களை காணலாம்.

Pudukottai Brhadambal Zodiac புதுக்கோட்டை பிரஹதாம்பாள் - ராசிகளின் சிற்பம்

இது போன்ற ராசி சிற்பங்களுக்கும், கோவில்கள் கட்டும் பணிக்கும் ஏதும் நேரடி தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. லகதர் எழுதிய ’அர்ச்ச ஜ்யோதிஷம்’, ‘யாஜுஷ் ஜ்யோதிஷம்’ என்ற வேதாங்க நூல்களில் ராசிகளை பற்றி குறிப்பு ஏதும் இல்லை. வேதகாலத்தில் இந்திய ஜோதிடத்தில் – விண்ணியலில் – ராசிகளை பயன்படுத்தப்படவில்லை.

इत्येवं मासवर्षाणां मुहुर्तोदयपर्वाणाम् ।
दिनर्त्वयनमासाङ्गं व्याख्यानां लगधोऽब्रवीत् ॥
இத்யேவம் மாஸவர்ஷாணாம் முஹூர்தோதயபர்வாணாம் ।
தினர்த்வயனமாஸாங்கம் வ்யாக்யானம் லகதோப்ரவீத் ॥

என்று யாஜுஷ் ஜ்யோதிஷத்தில் ஒரு ஸ்லோகம் கூறுகிறது.

பொருள் : “மாதம் (மாஸ), வருடம் (வர்ஷ), முஹூர்த்தம், உதயம், பருவம், தினம் (சூரிய தினம்), ருது (ஆறு காலங்கள் – உ.ம். வேனில், கார்), அயனம், ஆகியவற்றை அங்கங்களாக கொண்ட லகதர் கூறியுள்ளார்”

சற்றே வித்தியாசமாக, ஆவுடையார் கோவிலில், மாணிக்கவாசகர் சந்நிதியின் நுழைவாயில் உத்திரத்தில், 28 நக்ஷத்திரங்கள் சிற்பங்களாக குறிக்கப்பட்டுள்ளன. இவற்றை எனக்கு முதலில் காட்டியவர், புகைப்பட நிபுணர் அஷோக் கிருஷ்ணஸ்வாமி. இந்திய விண்ணியலில் 27 நக்ஷத்திரங்கள் முக்கியம் பெற்றவை – இவை சந்திரன் பூமியை சுற்றும் பாதையில் உள்ளவை. “Addresses of the Moon,” (சந்திரனின் விலாசங்கள்) என்று அஷோக் இவற்றை அருமையாக வர்ணித்தார். ரிக் வேத காலத்தில், ஒரு சில காலம் 28 நக்ஷத்திரங்களை சந்திரனின் விலாசங்களாக கருதினர். பின்னர் 28ஆம் நக்ஷத்திரம் – தக்ஷன், அபிஜித் என்று அதற்கு இரு பெயர்கள் உண்டு – கைவிடப்பட்டது. 27 நக்ஷத்திரங்களில், கிருத்திகையை தவிற, மற்றவை தனி நக்ஷத்திரங்களே. கிருத்திகை ஆறு நக்ஷத்திரங்களின் கூட்டம். ஆனால் இச்சிற்பத்திலோ பலவும் , நக்ஷத்திர கூட்டங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமும் தெரியவில்லை.


Aavudaiyaar Temple Zodiac - ஆவுடையார் கோவில் ராசிகளின் சிற்பம்

ஆரியபடரின் காலத்திலோ அதற்கு சற்று முன்னரோ, ராசிகள் இந்திய விண்ணியலில் நுழைந்து விட்டன. பாபிலோனிய நாகரிகத்தினர் ராசிகளை விண்ணியலில் முதலில் கையாண்டனர். இவர்களிடமிருந்து கிரேக்கர்கள் ராசியை கடன் வாங்கியிருக்கவேண்டும். கிரேக்கர்வழியாகவோ, பாரசீகர் வழியாகவோ, நேரடியாக பாபிலோனியரிடமிருந்தோ இந்தியர்கள் கடன் வாங்கியுள்ளனர்.

சூரியன் ஒரு மாதம் இருக்கும் நக்ஷத்திர குவியலுக்கு (ராஷி राशी) ராசியென்ற பெயர். 360 டிகிரி வான வட்டத்தை 12 ராசியாக வகுத்தால், ஒரு ராசி 30 டிகிரி அளவாகும்.

ஆரியபடரின் கணித கலைச்சொறகள்.

राशी ராஷீ = 30 டிகிரி = 30 degrees
अंशः அம்ஷ: = டிகிரி = degree
कला கலா = மினிட் = minute
नाडी நாடீ = செகண்ட் = second
विनाडी விநாடீ = 1/60 நாடீ

12 ராசி = 1 வட்டம் = 360 டிகிரி

Base 10 is decimal. Base 2 binary. Base 60 is sexagesimal. Base 20 is vigesimal.
10 அடிப்படை (base 10) எண் முறைக்கு, டெசிமல் என்று பெயர். 
2 அடிப்படை எண் முறை, பைனரி. 
60 அடிப்படை எண் முறை, செக்ஸாகெசிமல். 
20 அடிப்படை, வைகெசிமல்.

பாபிலோனியரையும் அவருடைய முன்னோர்களான சுமேரியரையும் தவிற எந்த நாகரிகமும் இந்த 60 அடிப்படை எண்முறையை பயன்படுத்தியதில்லை. அதிலிருந்தே 60 டிகிரி, மினிட், செகண்ட், 360 டிகிரி வட்ட அளவு எல்லாம் தோன்றியவை. மயன், அஸ்டெக் சமுதாயங்களும், கிரேக்க கலாச்சாரம் பரவும் முன் ஐரோப்பாவின் சிலச்சமுதாயங்களும் 20 அடிப்படை வைகெசிமல் எண்முறையை பயன்படுத்தின.

இன்று உலகில் யாவரும் கணிதத்திலும் விஞ்ஞானத்திலும் டெசிமல் முறையை பயன்படுத்துகிறோம். கணினியில் மட்டும் பைனரி. வட்ட அளவிலும் நேர அளவிலும் மட்டும் 60 அடிப்படை பாபிலோனிய செக்ஸாகெசிமல் தொடர்கிறது.

ஆரியபடரும் அவருக்கு பின்வந்த பிரம்மகுப்தர், முதலாம் பாஸ்கரர், மஹாவீரர், லீலாவதி எழுதிய பாஸ்கராச்சாரியார், கேரளத்தில் பரமேசுவரர், நீலகண்ட சோமசத்வன், ஜ்யேஷ்டதேவர் ஆகிய விண்ணியல் மேதைகளும் விண்ணியல் கணிதத்தை மட்டுமே கையாண்டனர். வராஹமிகிரர் விதிவிலக்காக, ராசி பலன், ஜாதகம், ஹோர சாத்திரம் போன்றவற்றை பற்றி விரிவாக எழுதினார். தங்களை பாதிக்கும் விஷயமாக மக்கள் நம்பும் இவ்வித ஜோதிடம், தீயைப்போல் சமுதாயத்தின் எல்லா தளங்களிலும் பரவியது.

ஆரியபடரின் விண்ணியலும், மஹாவீரரின் கணிதமும் ஒரு குறுகிய பண்டித வட்டத்தில் அடங்கிவிட்டது. பாமரருக்கும், கதை கவிதை எழுதும் இலக்கியவாதிகளுக்கும் இன்று போல் அன்றும் இது விளங்காப்புதிராகவும், திறமைக்கும் பயனுக்கும் அப்பால் தங்கிவிட்டது. அது மட்டுமன்றி, விண்ணியல் சார்ந்த கணிதம் மற்ற துறைகளில் எந்த அளவு நுழைந்தது என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு, கோயில் கட்டட கலையில் இந்த கணித கோட்பாடுகள் நுழைந்ததா என்பது கேள்விக்குறியே. அவை தேவையில்லை, தேவைப்படவில்லை என்பது வேறு விஷயம். 

உதாரணமாக தாராசுரத்து ஐராவதேஸ்வரர் கோவிலிலும், கோனாரக் சூரியனார் கோவிலிலும் உள்ள தேர் வடிவமும், அவற்றிலுள்ள சக்கரங்களும் புகழ் பெற்றவை. ஆனால் அவற்றை செதுக்க, ஆர்யபடீயம் போன்ற விண்ணியல் நூல்களில் உள்ள கணித விதிமுறைகள்  –geometry, trigonometry - தேவைப்படவில்லை. அதன் சாயல்களும் இச்சிற்பங்களில் இல்லை. இது குறையோ பெருமையோ இல்லை. யதார்த்தமாகவே எனக்கு தெரிகிறது.


Darasuram Chariot wheel - தாரசுரம் ரதசக்கரம்
Konarak Sun Temple - Chariot wheel - கோனார்க் சூரியனார் கோவில் ரத சக்கரம்
மய மதம் ஆகிய சில்பசாத்திர நூல்களை நான் படித்ததில்லை. குடந்தை ஸ்தபதி உமாபதி ஆச்சார்யரின் இல்லத்தில், வேதங்கள் கொண்ட ஓலைச்சுவடிகளை, காணும் பாக்கியம் பெற்றேன். அவர் அபார பணி செய்து வருகிறார்.  விஷ்வகர்மா குடும்பங்களின் கல்வி முறைபற்றியும், பாரம்பரிய ரகசியங்களை பற்றியும் அவரோடு நானும் நண்பர்கள் சிலரும் உரையாடியிருக்கிறோம். புதுக்கோட்டை கலை உலாவிற்கு அவரும் வந்திருந்தார். கோயில் கலைகளை விளக்க அவர் நடத்திய கருத்தரங்கம் ஞானம் வளர்த்தது.

இந்த கட்டுரை தகவலுக்கு மட்டுமல்ல, ஒரு தேடலுக்கும் : பல்வேறு துறைகளில் உள்ள அறிவியல் கலை ஒவ்வொன்றை எவ்வாறு தாக்கியது, பாதித்தது, வளர்த்தது என்று அறிய என் ஆவலின் பதிவு.

விஷ்வகர்மா கலையை பற்றி உமாபதி ஆச்சாரியரின் 

9 comments:

  1. அருமையான கட்டுரை. "27 நக்ஷத்திரங்களில், கிருத்திகையை தவிற, மற்றவை தனி நக்ஷத்திரங்களே" இது சரியான தகவல் அல்ல சார். பல நட்சத்திரங்கள். நட்சத்திரக் கூட்டங்களைக் கொண்டவையே. உதாரணமாக பரணி மூன்று நட்சத்திரங்களால் ஆனது. 'பரணி மூன்றும் அடுப்புக்கட்டி போல்' என்று சொற்றொடரே உண்டு.

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கு நன்றி. இவற்றை பற்றி மற்ற தகவல்களை தேட தூண்டியுள்ளீர்கள். சுட்டிகள் இருப்பின் பகிர வேண்டுகிறேன்.

      Delete
  2. அருமையான கட்டுரை. படங்கள் எல்லாமே அருமையாக உள்ளன. கடைசி இரண்டு படங்களும் சூப்பர். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. the speech by Shilpa Acharya is very powerful. the "thalattu - kaveri irandu, naduve Srirangam " tells what is Indian domain ART Culture an seeking for Mokasha - M V Seetaraman mvseetaraman@yahoo.com

    ReplyDelete
  4. விண்ணியலில் ராசிகள் நுழைந்ததும் ஜ்யோதிஷமாகிவிட்டது.
    ஆவுடையார்கோவில் புடைப்புசிற்பம் ஆர்வஆராய்ச்சிக்கு உரியது.
    படங்கள் அருமை.

    ReplyDelete
  5. Thanks for this excellent write-up Gopu Sir. Amazing indeed !! (S.Sivasankaran)

    ReplyDelete
  6. Even entire temple architecture of Kumbakonam Sri Sarangapani temple, in a Chariott form, whereby Sri Sarangapani Perumal is purportedly lying on, the outer view would be a lovely piece of Art indeed. Whenever I visit Sarangapani and Chakrapani Temples, I used to wonder how they would have spent enormous effort and time, and labour behind bringing out such wonders.

    ReplyDelete
  7. Excellent writeup...I didn't know till now that there existed a system with base 60....

    ReplyDelete